"திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற பழ மொழிக்கேற்ப, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, பர்மாவுக்குச் சென்று வணிகத்தில் ஈடுபட்டு, கடும் உழைப்பால் தொழிலதி பர்களாக உயர்ந்த தமிழர்கள், 1960-களில் அங்கே ஏற்பட்ட ராணுவப் புரட்சியால், அங்கிருந்து தாயகத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். எனவே 1964 முதல் பர்மாவிலிருந்து தமிழர்கள் அதிக அளவில் இங்கு வந்ததால், 1967ஆம் ஆண்டில் அரியணை ஏறிய அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு, தாயகம் திரும்பிய தமிழர்களின் தேவை அடிப்படையில், திருவள்ளுவர் கூட்டுறவு அச்சகத்தைத் தொடங்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/repcobank.jpg)
அதன்பின் 1969ஆம் ஆண்டில், கலைஞரின் முன்னெடுப்பில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரெப்கோ வங்கி தொடங்கப்பட்டது. அதே கலைஞர், 1999-2000ஆம் ஆண்டில், தாயகம் திரும்பிய தமிழர்களின் வீட்டு வசதிக் கடன் உதவிக்காக ரெப்கோ வீட்டுவசதிக் கடன் நிறுவனத்தை உருவாக்கினார். ரெப்கோ வங்கியின் 100 சதவீத முதலீட்டில் இந்த ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் அடிப்படை அம்சமே, தாயகம் திரும்பிய பர்மா, இலங்கைத் தமிழர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவதாகும். இப்படிப்பட்ட ரெப்கோ வங்கியானது, தற்போது அதன் உருவாக்கத்துக்கான காரணத்திலிருந்து விலகி, தாயகம் திரும்பிய தமிழர்களைக் கைவிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தை நிறுவிய இயக்குநர் முனைவர்.திருவேங்கடத்திடம் இதுகுறித்து கேட்டபோது, "தற்போது ரெப்கோ வங்கியானது 16,000 கோடி ரூபாய்க்குமேல் வணிகம் செய்துவருகிறது. இதிலிருந்து சில ஆயிரம் கோடி ரூபாய்கூட தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு கடனுதவியாக வழங்கப்படவில்லை. 2011 தி.மு.க. ஆட்சி இருந்தவரை வருவாய்த்துறை சார்ந்தவர்கள்தான் இதன் தலைவராக இருந்தார்கள். இறுதியாக, கருப்பையா பாண்டியன் ஐ.ஏ.எஸ். தலைவராக இருந்தார். ஆனால் கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், அரசு சார்பற்ற தனியாரைத் தலைவராகக் கொண்டுவந்தார்கள். இதற்கு முழுக்க பின்புலமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடியின் நிழல் முதல் மந்திரி என்று சொல்லப்படக்கூடிய சேலம் இளங்கோவன் இருந்தார். அவர்மூலம் தான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் இந்த நிறுவனங்களின் போக்கே மாறிவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/repcobank1.jpg)
தற்போது இதன் நிர்வாகம், முழுக்க முழுக்க தமிழ் மொழியே தெரியாதவர்களால் நிரம்பியிருக் கிறது. இப்படியானவர்களால் தமிழ் மட்டுமே தெரிந்த மக்களுக்கு உதவ முடியாது என்பதால், இந்த நிர்வாகக்குழுவை முற்றிலுமாக மாற்ற வேண்டுமெனக்கூறி, போராட்டத்தில் இறங்கியுள் ளோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போராட்டத்தை அறிவித்ததுமே, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பதவியில் தொடர விரும்பாமல் பதவி விலகிவிட்டார். அதைத்தொடர்ந்து மற்ற இரு இயக்குநர்களும் பதவி விலகியுள்ளனர். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் குழுவில் ஒருவர் மட்டுமே தாயகம் திரும்பியவராக இருக்கிறார்'' என்று குற்றம்சாட்டினார்.
பர்மாவிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர் ஓ.சுந்தரம் கூறுகையில், "பர்மாவிலிருந்து தாயகம் திரும்பிய நான், ரெப்கோவில் 'ஏ' கிளாஸ் மெம்பர். லால்பகதூர் சாஸ்திரி - ஸ்ரீமாவோ பண்டார நாயகா காலத்தில் செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஸ்ரீலங்காவிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி னார்கள். அதேபோல் பர்மாவிலிருந்தும் கப்பல் மூலமாக 5 லட்சம் பேரை அழைத்துவந்தார்கள். நான் எனது அம்மா, அப்பா, குடும்பத்தினருடன் 1965ஆம் ஆண்டில், எட்டு வயதுச் சிறுவனாக முகமதியா என்ற கப்பல் மூலமாக பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். பர்மாவில் எங்களுடைய உழைப்பு, சம்பாத்தியம், வீடு அனைத்தையும் விட்டுவிட்டு, வெறும் 5 பவுன் தங்கம், 50 கிலோ எடைகொண்ட பொருட்களுடன் கப்பலில் இந்தியாவுக்கு வந்தோம். தற்போது சென்னை நீலாங் கரையில் வசித்து வருகிறோம். எனது வீட்டை மறு சீரமைப்பதற்காக அடையார் -காந்தி நகர், ரெப்கோ ஹவுஸிங் பைனான்ஸில் லோன் கேட்டபோது ஹவுஸிங் பைனான்ஸில் பணம் தரமுடியாதென் றும், ரெப்கோ வங்கியில் தான் தர முடியும் என்றும் கூறிவிட்டார்கள். ரெப்கோ ஹவுஸிங் பைனான்ஸில் 6% தான் வட்டிவிகிதம். 2.5 லட்சம் ரூபாய் மானியமும் தரப்படும். ஆனால் ரெப்கோ வங்கியில் 14% வட்டியை செலுத்த
வேண்டியிருக்கும். மானி யம் எதுவும் தர மாட்டார்கள். வட நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் ஆதிக்கம் காரணமாக, எங்க ளைப் போன்ற தாயகம் திரும்பியோரின் நன்மைக் காக உருவாக்கப்பட்ட ரெப்கோ ஹவுஸிங் பைனான்ஸில் கடன் வழங்க மறுக்கிறார்கள்'' என்று குற்றம் சுமத்தினார். "இதனால் கூடுதல் வட்டிக்கு கடன் பெற்று மிகுந்த சிரமப்பட்டு மன உளைச்சலோடு கட்டி முடித்தேன்.
ரெப்கோ வீட்டு வசதிக் கடன் நிறுவனத்தில் கடன் பெற 100% உரிமை இருந்தும், மறுக்கப்பட்ட, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய பொன்.தன பால் என்பவரிடம் கேட்டபோது, "நாங்க 1974ஆம் ஆண்டிலேயே இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டோம். தாயகம் திரும்பிய மக்களில் 174 பேருக்கு பூந்தமல்லி அருகேயுள்ள கூடப்பாக்கம் என்ற இடத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பாக வீடுகள் கொடுத்தார்கள். அந்த வீட்டைப் பெறுவதற்கு ஒரு வீட்டுக்கு 63,000 ரூபாய் அரசாங்கத் துக்கு கட்ட வேண்டி யிருந்தது. அவ்வளவு பணம் என்னிடம் இல்லாததால் மறுவாழ்வுத்துறைக்கு மனு கொடுத்தோம். அவர்கள் ரெப்கோ வீட்டு வசதிக் கடன் நிறுவன எம்.டி.யிடம் கடன் வழங்கும்படி கூறி னார். ஆனால் வீட்டுக்கடன் நிறுவனத்தில் கடன் வழங் காமல் ரெப்கோ வங்கியில் தான் கடன் வழங்கினார் கள். இதனால் கூடுதல் வட்டியைச் செலுத்தி மிகுந்த சிரமத்துக்குப் பின்னரே கடனடைக்க முடிந்தது. எங்களுக்கான உரிமையை மறுக்கிறார்கள்'' என்றார்.
ரெப்கோ வீட்டுக் கடன் வங்கியின் நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிவதற்காக அந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சுவாமிநாதனை 70*******1 என்ற எண்ணில் தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்கவில்லை. எனவே அவரை வாட்சப்பில் தொடர்புகொண்ட போதும் பதிலளிக்கவில்லை. பதிலளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.
எனவே இதுவிசயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி, அதன் நிர்வாகத்திலும், கடனுதவி வழங்குவதிலும் தமிழர்களுக்கான பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பதே தாயகம் திரும்பிய தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/repcobank-t.jpg)